3517. | மண்ணகம் திரிய, நின்ற மால் வரை திரிய, மற்றைக் கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய, காவல் விண்ணகம் திரிய, மேலை விரிஞ்சனும் திரிய, வீரன், எண் அரும் பொருள்கள் எல்லாம்' என்பது தெரிந்ததுஅன்றே? |
மண்ணகம் திரிய - நிலவுலகம் (தன் நிலை கெட்டுச்) சுழல; நின்ற மால் வரை திரிய - அசையாது நிற்கும் பெரிய மலைகள் சுழல; மற்றை - மற்றும்; கண் அகன் புனலும் - இடமகன்ற (கடல்) நீரும்; காலும் - காற்றும்; கதிரொடும் திரிய - கதிரவன் நிலவு உடன் சுழல; காவல் விண்ணகம் திரிய - தேவர்கள் காக்கும் மேல் உலகம் சுழல; மேலை விரிஞ்சனும் திரிய - மேல் உலகில் உள்ள பிரமனும் சுழல; வீரன் - வீரனாகிய இராமன்; எண் அரும் பொருள்கள் எல்லாம் என்பது - தான் எண்ண முடியாத உலகப் பொருள்கள் எல்லாவற்றின் வடிவமாக உள்ளவன் என்பது; தெரிந்தது அன்றே - நன்கு விளங்கியது. அனைத்தும் அவனான படியினாலே அவன் மனநிலை மாறிச் சினந்தவுடன் அனைத்துப் பொருள்களும் நிலை திரிந்தன என்றபடி. கால் - காற்று, விரிஞ்சன் - பிரமன், மால்வரை - உரிச்சொல் தொடர், ஐ - சாரியை, அன்றே - ஏகாரம் தேற்றம். 115 |