3518.'குறித்த வெங் கோபம் யார்மேல்
     கோளுறும்கொல்?' என்று அஞ்சி,
வெறித்துநின்று, உலகம் எல்லாம்
     விம்முறுகின்ற வேலை,
பொறிப் பிதிர் படலை, செந் தீப்
     புகையொடும் பொடிப்ப 'பொம்' என்று
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற
     இராமனும் இயம்பலுற்றான்:

    குறித்த வெங்கோபம் - (இராமன் மனத்தில்) கொண்ட கொடிய
சினம்; யார் மேல் கோளுறுங் கொல் - யாவர் மேல் செலுத்தப்படும்
கொல்; என்று அஞ்சி - என்று எண்ணி அஞ்சி; உலகம் எல்லாம் -
உலகங்கள் எல்லாம்; வெறித்து நின்று - திகைப்படைந்து நின்று;
விம்முறுகின்ற வேலை - கலங்குகிற நேரத்தில்; பொறிப் பிதிர் படலை -
பொறிகளின் தொகுதி; செந்தீப் புகையொடும் பொடிப்ப - சிவந்த நெருப்பு
புகையுடன் தோன்றும் படி; எறிப்பது ஓர் முறுவல் பொம் என்று தோன்ற
-
ஒளி விடுவதான ஒப்பற்ற புன்சிரிப்பு பொம் என்று தோன்ற; இராமனும்
இயம்பல் உற்றான் -
இராமனும் சில கூறத் தொடங்கினான்.

     இராமனது சினம் யார் மேல் செல்லுமோ என அனைத்துலகும்
திகைத்து நின்ற நிலையில், செந்தீப் புகையொடு எழ அவன் வெகுளி
கொண்டு புன்முறுவல் பூத்துக் கூறலானான் என்பதாம். கோளுறுதல் -
செல்லுதல். வெறித்து - திகைத்து. படலை - கொழுந்துத் தொகுதி. பொம் -
ஒலிக் குறிப்பு; பிதிர்தல் - சிதறல். கொல் - ஐயப் பொருள் தருவதோர்
இடைச்சொல். உலகம் - இடவாகுபெயர்.                          116