3519. | 'பெண் தனி ஒருத்திதன்னை, பேதை வாள் அரக்கன் பற்றிக் கொண்டனன் ஏக, நீ இக் கோளுற, குலுங்கல் செல்லா எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை, இன்னே, கண்ட வானவர்களோடும் களையுமாறு, இன்று காண்டி. |
தனி ஒருத்திபெண் தன்னை - தனித்து (த் துணையின்றி) இருந்த பெண் ஒருத்தியை; பேதை வாள் அரக்கன் - அறிவற்ற வாளேந்திய அரக்கன்; பற்றிக் கொண்டனன் ஏக - பற்றிக் கொண்டு செல்ல; நீ இக் கோளுற - நீ இத்தகைய நிலையை அடைய; குலுங்கல் செல்லா - நடுங்காது நின்ற (பேரவலம் கண்டும் வாளாயிருந்த); எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை - எட்டுத் திசைகளை எல்லையாகக் கொண்ட உலகங்களாகிய இவற்றையெல்லாம்; கண்ட வானவர்களோடும் - (இச் செயல்) கண்டு (எதுவும் செய்யாமல் வாளாவிருந்த) தேவர்களோடும்; இன்று - இன்றைக்கு; இன்னே - இப்பொழுதே; களையுமாறு - (நான்) முழுவதும் அழித்தலை; காண்டி - நீ பார்ப்பாயாக என்றவாறு. இத்துணைக் கொடுமைகள் நடந்தும் நடுங்காத உலகையும், தடுக்காத தேவர்களையும் இப்பொழுதே அழிப்பேன் நீ பார் என்று இராமன் சினந்து சடாயுவிடம் கூறினான். கொண்டனன் - முற்றெச்சம், செல்லா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 117 |