3521. | 'இக் கணம் ஒன்றில், நின்ற, ஏழினொடு ஏழு சான்ற மிக்கன போன்று தோன்றும், உலகங்கள் வீயுமாறும், திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து, நீரின் மொக்குளின் உடையுமாறும், காண்' என, முனியும் வேலை, |
இக்கணம் ஒன்றில் - இந்த ஒரு கணத்தில்; நின்ற - நிலை பெற்று நின்றுள்ள; மிக்கன போன்று தோன்றும் - மிகவும் பெரியவை போல் தோன்றுகிற; ஏழினொடு ஏழு சான்ற உலகங்கள் - பதினான்கு என்ற எண் தொகை அமைந்த உலகங்கள்; வீயுமாறும் - அழியும் தன்மையையும்; திக்குடை - எட்டுத் திக்குகளை உடைய; அண்ட கோளப் புறத்தவும் - அண்ட கோளத்துக்குப் புறத்தில் உள்ளவையும்; தீந்து - (சினந்தால்) கருகிப் போய்; நீரின் மொக்குளின் உடையுமாறும் - நீரில் தோன்றுகிற குமிழி போல உடைந்து போகும் தன்மையினையும்; காண் - காண்பாயாக; என முனியும் வேலை - என்று கூறிச் சினந்த போது...., (அடுத்த பாடலில் வரும், செய்திகளோடு தொடர்புபட்டு முடியும்) நிலை பெற்று மிகப் பெரியவை போல் தோன்றுகிற பதினான்கு உலகங்களும் நீர்க்குமிழி போல் என் சினத்தால் அழிவதைக் காண் என்றவாறு. இக்கணம் ஒன்றில் - அழிவின் விரைவு குறித்தது. மிக்கன போன்று தோன்றும் - தன் ஆற்றலுக்கு முன் அவை மிக்கன அல்ல என்பது குறித்தது. வீயுமாறு - அழியுமாறு. தீந்து - கருகி. மொக்குள் - குமிழ். முனிதல் - சினத்தல். வேலை - பொழுது. 119 |