3522.வெஞ் சுடர்க் கடவுள் மீண்டு,
     மேருவில் மறையலுற்றான்;
எஞ்சல் இல் திசையில் நின்ற
     யானையும் இரியல்போன;
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என்?
     துணிந்த நெஞ்சின்,
அஞ்சினன், இளைய கோவும்; அயல்
     உளோர்க்கு அவதி உண்டோ?

     வெஞ்சுடர்க் கடவுள் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்;
மீண்டு - (அவனது சினத்தில் இருந்து) தப்பி; மேருவில் மறையலுற்றான் -
மேரு மலையில் மறையத் தொடங்கினான்; எஞ்சல் இல் - அழிதல்
இல்லாத; திசையில் நின்ற யானையும் - திக்குகளில் (நிலை பெற்று)
நின்றுள்ள (எட்டு) யானைகளும்; இரியல் போன - அஞ்சி ஓடிப் போயின;
உலகம் எல்லாம் துஞ்சின என்பது என் - உலகில் உள்ள உயிரினங்கள்
எல்லாம் வருத்தம் கொண்டன என்று கூறுவது ஏன்?; துணிந்த நெஞ்சின்-
மிக நெஞ்சுரம் கொண்ட; இளைய கோவும் - இலக்குவனும்; அஞ்சினன்-
அஞ்சினன் என்றால்; அயல் உளோர்க்கு அவதி உண்டோ - மற்றும்
உள்ளோர் கொண்ட அச்சத்துக்கு எல்லை உண்டோ? (இல்லை).

     கதிரவன் மேரு மலையில் மறைய, திசை யானைகள் அஞ்சி ஓட,
மிக்க வலிமையும் மன ஊக்கமும் படைத்த இலக்குவனே அஞ்ச, அயல்
உள்ளோர் பேரச்சம் கொள்ள இராமன் பெருஞ்சினம் கொண்டான் என்க.
இரியல் - ஓடல். துஞ்சுதல் - அழிதல்; ஈண்டு வருந்துதல். அவதி -
துன்பம்.                                                    120