இராமன் சீற்றத்தைச் சடாயு தணித்தல் 3523. | இவ் வழி நிகழும் வேலை, எருவைகட்கு இறைவன், 'யாதும், செவ்வியோய்! முனியல்; வாழி! தேவரும் முனிவர்தாமும், வெவ் வலி வீர! நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் எவ் வலி கொண்டு வெல்வார், இராவணன் செயலை?' என்றான். |
இவ்வழி நிகழும் வேலை - இவ்வாறு நடக்கும் பொழுது; எருவை கட்கு இறைவன் - கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு; செவ்வி யோய் - நன்மைக் குணங்கள் கொண்டவனே!; வாழி - வாழ்வாயாக; யாதும் முனியல் - சிறிதளவு கூடச் சினம் கொள்ளாதே; வெவ்வலிவீர - வெலற்கரு வலி படைத்த வீரனே; தேவரும் முனிவர் தாமும் - தேவர்களும் முனிவர்களும்; நின்னால் வெல்லும் என்று - உன்னைக் கொண்டு (தம் பகைவர்களாகிய அரக்கர்களை) வெல்வோம் என்று (எண்ணிக் கொண்டு); ஏமுற்று உய்வார் - மகிழ்ச்சியுடன் உயிர் வாழ்கிறார்கள்; இராவணன் செயலை - (அப்படிப்பட்டவர்கள்) இராவணன் செய்த கொடுமையான செயலை; எவ்வலி கொண்டு வெல்வார் - எந்த வலிமையைக் கொண்டு (தடுத்து) வெற்றி பெறுவார்கள்; என்றான் - என்று கூறினான். ஏமுற்று - பாதுகாவலால் மகிழ்ந்து நிற்றல், 121 |