3525. | 'தெண் திரை உலகம் தன்னில், செறுநர் மாட்டு ஏவல் செய்து பெண்டிரின் வாழ்வர் அன்றே? இது அன்றோ தேவர் பெற்றி! பண்டு உலகு அளந்தோன் நல்க, பாற்கடல் அமுதம் அந்நாள் உண்டிலர் ஆகில், இந்நாள் அன்னவர்க்கு உய்தி உண்டோ?' |
தெண்திரை உலகம் தன்னில் - தெளிந்த அலைகளை உடைய (கடலால் சூழப்பட்ட இந்த) உலகத்தில்; பெண்டிரின் - பெண்களைப் போல; செறுநர் மாட்டு ஏவல் செய்து - பகைவர்களாகிய (அரக்கர்களிடம்) ஏவல் கூவல் பணி செய்து; வாழ்வர் அன்றே - வாழ்கின்றார்கள் அல்லவா; தேவர் பெற்றி இது அன்றோ? - தேவர்களின் தன்மை இது அல்லவா?; பண்டு உலகு அளந்தோன் - முன்பொரு காலத்து மூவுலகும் ஈரடியால் அளந்த திருமால்; பாற்கடல் அமுதம் - திருப்பாற்கடலில் தோன்றிய அமுதத்தை; அந்நாள்நல்க - அந்த (கடல் கடைந்த) நாளில் கொடுக்க; உண்டிலர் ஆகில் - (அதை இவர்கள்) உண்ணாமல் இருந்திருந்தால்; இந்நாள் - இப்பொழுது; அன்னவர்க்கு - அவர்களுக்கு; உய்தி உண்டோ - (உயிரொடு தப்பிப்) பிழைத்தலும் உள்ளதோ? (இல்லை என்பதாம்). முன்பு அமிழ்தம் உண்டமையால் தேவர்கள் உயிர் ஒடுங்காது இராவணனுக்கு மகளிர் போல் ஏவல் செய்து உயிர் வாழ்கின்றனர். அவர்கள் இராவணனைச் சீதையைத் தூக்கிச் செல்லும் போது தடுக்க வில்லையே? என்று நீ சினப்பதில் பொருளில்லை என்ற படி. செறுநர் - பகைவர். இன் - உவம உருபு. உய்தல் - தொழிற் பெயர். 123 |