3526. | 'வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக, கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்; அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும்காலை, உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ? |
அம்பு இழை - அம்பினைத் தொடுக்கின்ற; வரிவில் செங்கை - கட்டமைந்த வில்லினை ஏந்திய சிவந்த கைகளை உடைய; ஐயன்மீர் - மக்களே!; வம்பு இழை கொங்கை - கச்சு அணிந்த முலைகளை உடைய; வஞ்சி - வஞ்சிக்கொடி போன்ற சீதை; வனத்திடை - காட்டில்; தமியள் வைக - தனித்தவளாய்த் தங்கி இருக்க; கொம்பு இழை மானின் - கொம்பு பொருந்திய (மாயப்பொன்) மானின்; பின் போய் - பின்னால் போய்; குலப்பழி கூட்டிக் கொண்டீர் - (சீதையை இழந்து அதனால் உங்கள்) குலத்துக்குப் பெரும் பழியை உண்டாக்கிக் கொண்டீர்கள்; ஆயும் காலை - ஆராய்ந்து பார்க்கும் இடத்து; உம் பிழை என்பது அல்லால் - (அச்செயல்) உங்களது குற்றம் என்பது அல்லால்; உலகம் செய் பிழையும் உண்டோ - (இதில்) உலகத்தார் செய்த குற்றம் ஏதாவது உள்ளதா? நீங்கள் வஞ்சியை வனத்திடைத் தமியள் வைக விட்டு மானின் பின் போய்ச் செய்த செயல் உங்கள் குற்றமேயல்லாமல் உலகம் செய் பிழையன்று என்று சடாயு கூறினான். குற்றமும் பழியும் உங்கள்பால் இருக்கப் புறத்தே பிறவற்றை பிறரையும் சினப்பது ஏன் என்பது சடாயு குறிப்பு. வம்பு - கச்சு. வஞ்சி - உவமை ஆகுபெயர். குலப்பழி - நான்காம் வேற்றுமைத் தொகை. உலகம் - இடவாகுபெயர். 124 |