3527.'ஆதலால், முனிவாய்அல்லை; அருந்ததி
     அனைய கற்பின்
காதலாள் துயரம் நீக்கி, தேவர்தம்
     கருத்தும் முற்றி,
வேதநூல் முறையின் யாவும் விதியுளி
     நிறுவி, வேறும்
தீது உள துடைத்தி' என்றான்-சேவடிக்
     கமலம் சேர்வான்.

    ஆதலால் - (நும்பிழையின் விளைவு இது) ஆதலால்; முனிவாய்
அல்லை -
நீ சினம் கொள்வாயல்லை; அருந்ததி அனைய கற்பின்
காதலாள் துயரம் நீக்கி -
வசிட்டரின் மனைவியாகிய அருந்ததியை ஒத்த
கற்பினை உடைய (உன்னைக்) காதலிக்கும் மனைவியாகிய சீதையின்
துன்பத்தைத் துடைத்து; தேவர்தம் கருத்தும் முற்றி - தேவர்களின்,
(அரக்கரை முழுதும் தொலைக்கும்) எண்ணத்தை நிறைவேற்றி; வேத நூல்
முறையின் யாவும் விதியுளி நிறுவி -
வேதங்களில் ஒழுக்கமாகக்
கூறப்பட்டுள்ளவை யாவற்றையும் விதி நிலை நிறுத்தி; வேறும் உள தீது
துடைத்தி -
மற்றுள்ள தீங்குகளையும் நீக்குவாய்; என்றான் - என்று
கூறினான்; சேவடிக் கமலம் சேர்வான் - (அவனது) சிவந்த
திருப்பாதமாகிய தாமரையைச் சேர்தற்கு உரியவனாகிய சடாயு.

     'நீ சினவற்க. இனிச் செய்ய வேண்டுவது கற்பினுக்கரசியின் துன்பம்
நீக்கி, அமரர் செய்த தவப் பயனை முற்றுவித்து, வேத முறைப்படி
அனைத்தையும் நிலை நாட்டித் தீமையை அழித்து அறத்தை நாட்டலே
என்று சடாயு இராமனிடம் கூறினான். அருந்ததி - வசிட்டர் மனைவி.
சேவடிக் கமலம் - பரம பதம் என்பர். நீக்கி, முற்றி, நிறுவி துடைத்தி என
வினை முடிவு கொள்க. சேவடிக் கமலம் - உருவகம்.               125