3528.புயல் நிற வண்ணன், ஆண்டு, அப்
     புண்ணியன் புகன்ற சொல்லை,
'தயரதன் பணி ஈது' என்ன,
     சிந்தையில் தழுவிநின்றான்;
'அயல் இனி முனிவது என்னை?
     அரக்கரை வருக்கம் தீர்க்கும்
செயல் இனிச் செயல்' என்று எண்ணி,
     கண்ணிய சீற்றம் தீர்ந்தான்.

    புயல் நிறவண்ணன் - கரு மேகத்தின் நிறம் போன்ற நிறத்தை
உடைய இராமன்; அப்புண்ணியன் ஆண்டு புகன்ற சொல்லை - அப்
புண்ணியனாகிய சடாயு அப்பொழுது சொன்ன சொற்களை; ஈது தயரதன்
பணி என்ன -
இது தயரத மன்னனின் கட்டளையாகும் என்று; சிந்தையில்
தழுவி நின்றான் -
மனத்தில் (முழுதும்) ஏற்று நின்றவனாய்; இனி அயல்
முனிவது என்னை -
இனிமேல் பிறரைச் சினத்தலால் யாது பயன்?;
அரக்கரை தம் வருக்கம் தீர்க்கும் - அரக்கர்களின் இனத்தை
(முழுதுமாக) அழிக்கும்; செயல் இனிச் செயல் - செயலே இனிச் செய்ய
வேண்டிய செயல்; என்று எண்ணி - என்று மனத்தில் சிந்தித்துப் பார்த்து;
கண்ணிய சீற்றம் தீர்ந்தான் - மனத்தில் தோன்றிய சினத்தை விட்டான்.

     தந்தை சொல் தலை மேற் கொண்ட இராமன், சடாயுவின்
சொற்களைத் தந்தை சொல்லாகவே ஏற்று, அரக்கரை வேரோடு அழித்தலே
செயத்தக்கது எனத் தேர்ந்து சீற்றம் விட்டனன். புயல் - மேகம், பண்பு
குறித்ததாகவும் கொள்ளலாம். அவ்வாறாயின் மேகம் போல் இன்னார்
இனியார் என்னாது அருள் செய்பவன் இராமன் எனக் கொள்க. ஆண்டு -
அப்பொழுது; பணி - கட்டளை அல்லது ஆணை.                  126