வீரச் சடாயுவின் தெய்வ மரணம்

3529. ஆயபின், அமலன் தானும்,
     "ஐய! நீ அமைதி" என்ன
வாயிடை மொழிந்தது அன்றி, மற்று
     ஒரு செயலும் உண்டோ?
போயது அவ் அரக்கன் எங்கே? புகல்'
     என புள்ளின் வேந்தன்
ஓய்வினன்; உணர்வும் தேய,
     உரைத்திலன்; உயிரும் தீர்ந்தான்.

    ஆயபின் - இவ்வாறு சீற்றம் தீர்ந்த பிறகு; அமலன் தானும் - குற்ற
மற்றவனாகிய இராமனும்; ஐய - (சடாயுவைப் பார்த்துத்) தந்தையே; நீ
அமைதி என்ன வாயிடை மொழிந்தது அன்றி -
நீ அமைதியாக இரு
என்று (உன்) வாயால் கூறியபடி அல்லாமல்; மற்று ஒரு செயலும்
உண்டோ -
வேறு நான் செயத்தக்க செயல்கள் ஏதேனும் உளதா (இல்லை
என்றபடி); அவ்வரக்கன் போயது எங்கே புகல் என - அந்த
அரக்கனாகிய இராவணன் சென்றது எங்கே (என்று) கூறுக என்று (கேட்க);
புள்ளின் வேந்தன் - பறவைகளுக்குத் தலைவனாகிய சடாயு; ஓய்வினன் -
தளர்ச்சி உடையவனாய்; உணர்வும் தேய - அறிதலுணர்வும் குறைய;
உரைத்திலன் - (இராமன் கேட்டதற்கு) விடை ஒன்று கூற மாட்டாதவனாய்;
உயிரும் தீர்ந்தான் - உயிரும் விட்டான்.

     'நீ கூறியதை ஏற்றலே என் கடன், அது தவிர வேறு பணி எனக்கு
இல்லை' என்று கூறிய இராமன், 'இராவணன் யாண்டையான்' என
வினவினான்; சடாயு அதற்கு விடை கூறு முன்பே உயிர் விட்டனன்.
ஓய்வினன், உரைத்திலன் - முற்றெச்சங்கள்.                        127