3530. | சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே? வேதங்கள் காண்கிலாமை, வெளிநின்றே மறையும் வீரன் பாதங்கள் கண்ணின் பார்த்தான்; படிவம் கொள் நெடிய பஞ்ச பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான். |
சீதம் கொள் மலருளோனும் - குளிர்ச்சி பொருந்திய தாமரை மலரில் தோன்றிய பிரமனும்; தேவரும் என்பது என்னே - பிற தேவர்களும் (காண அரியவன்) என்பதைச் சொல்ல வேண்டுவது எற்றுக்கு?; வேதங்கள் காண்கிலாமை - (தனது சொரூபலட்சணத்தை வெளியிடுவதற்கென்றே தோன்றியவையாகச் சொல்லப்படுகின்ற) வேதங்களும் காண முடியாதவனாய்; வெளிநின்றே மறையும் - (அவற்றின்) வெளிப்புறத்திலேயே நின்று மறைகிற (சொரூபத்தை உடையவனாகிய); வீரன் - பெருவீரனான இராமனுடைய; பாதங்கள் - திருப்பாதங்களை; கண்ணின் பார்த்தான் - (தன்) கண்களால் தரிசித்தவனாகிய (சடாயு); நெடிய படிவம் கொள் பஞ்ச பூதங்கள் - பெரிய வடிவம் கொண்ட ஐம்பெரும் பூதங்கள்; விளியும் நாளும் - அழிகிற முடிவுக் காலத்திலும்; போக்கு இலா உலகம் - அழிதல் இல்லாத பரம பதத்தை; புக்கான் - அடைந்தான். பிரமனும் பிற தேவரும் காண முடியாத பரம் பொருள் என்பது என்? வேதங்கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியாக விளங்குகிற சொரூப லட்சணம் உடைய இராமனது திருவடிகளை இறுதியாகத் தரிசித்த புண்ணியத்தால் பஞ்ச பூதங்களும் ஒடுங்கும் கற்பாந்த காலத்திலும் அழிதல் இல்லாத பரமபதத்தைச் சடாயு பெற்றனன் என்க. சீதம் - குளிர்ச்சி. படிவம் - வடிவம். விளியும் - அழியும், போக்கு - அழிவு, காண்கிலாமை - எதிர்மறைத் தொழில் பெயர், இலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். போக்கு இலா உலகம் - அழியாத பரமபதம். 128 |