3531. | வீடு அவன் எய்தும் வேலை, விரிஞ்சனே முதல மேலோர், ஆடவர்க்கு அரசனோடு தம்பியும், அழுது சோர, காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து சாய்ந்த; சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே. |
அவன் வீடு எய்தும் வேலை - அச் சடாயு பரமபதம் அடையும் காலத்தில்; ஆடவர்க்கு அரசனோடு - ஆடவர் திலகனாகிய இராமன் தன்னோடு; தம்பியும் - தம்பியாகிய இலக்குவனும்; அழுது சோர - அழுது மெலிய; காடு அமர் மரமும் - காட்டில் உள்ள மரங்களும்; மாவும் - மிருகங்களும்; கற்களும் - மலைகளும்; கரைந்து சாய்ந்த - (இராமனின் சோகம் கண்ட இரக்கத்தினால்) கரைந்து தளர்ந்தன; விரிஞ்சனே முதல மேலோர் - பிரமன் முதலிய மேலுலகத்தவர்களும்; சேடரும் - கீழ் உலகத்தினராகிய நாகர்களும்; பாருளோரும் - (இடைப்பட்ட) நில உலகத்தில் உள்ள மக்களும்; கரம் சிரம் சேர்த்தார் - (சடாயுவின் செயல் கண்ட மதிப்பினால்) கைகளைத் தலைமேல் சேர்த்து வணங்கினார். அன்றே - ஈற்றசை. இராமலக்குவர் சடாயுவின் இறப்பிற்கு அழுது தளர, இராமனின் சொரூபமாக உள்ள அனைத்தும் கரைந்து தளர்ந்தன. மூவுலகத் தவரும் சடாயு பரமபத மடைதலைக் கண்டு தலை மேல் கை குவித்து வணங்கினர். தன்னுயிரைப் புகழுக்கு விற்று இராம கைங்கர்யம் செய்து, திருவடிக் காட்சி பெற்று பரமபதமடைந்த சடாயுவை மூவுலகத்தவரும் தலை மேல் கை குவித்து வணங்கினர் என்பதாம். அமர்தல் - மேவல். சேடர் - கீழுலகத்தவர்களாகிய நாகர்கள். பாருளோர் - நிலவுலகத்தவர். விரிஞ்சனே - ஏகாரம் சிறப்புப் பொருள் குறித்தது. 129 |