இராமன் தளர, இளையவன் தேற்றுதல்

3532.'அறம்தலை நின்றிலாத அரக்கனின்,
     ஆண்மை தீர்ந்தேன்;
துறந்தனென், தவம் செய்கேனோ?
     துறப்பெனோ உயிரை? சொல்லாய்;
பிறந்தனென் பெற்று நின்ற
     பெற்றியால், பெற்ற தாதை
இறந்தனன்; இருந்துளேன் யான்; என்
     செய்கேன்? இளவல்!' என்றான்.

    இளவல் - இளைய தம்பியே!; அறம் தலை நின்றிலாத அரக்கனின்-
அறவழியில் நிலைத்து நிற்றல் இல்லாத அரக்கனால்; ஆண்மை
தீர்ந்தேன் -
ஆண்மையை இழந்தவனாகிய (யான்); துறந்தனென் தவம்
செய்கேனோ -
முற்றும் துறந்தவனாய்த் தவம் செய்வேனோ?; உயிரை
துறப்பெனோ -
உயிரை விட்டு விடுவேனோ?; சொல்லாய் - (இரண்டில்
தக்கது எது என நீ) சொல்வாய்; பெற்று நின்ற பெற்றியால் - (என்னை
மகனாகப்) பெற்று நின்ற தன்மையால்; பெற்ற தாதை இறந்தனன் -
(என்னைப்) பெற்ற தயரதனும் (ஆரண்யத்தில் பெற்ற தந்தையாகிய
சடாயுவும்) இறந்து போனான்; பிறந்தனென் யான் இருந்துளேன் -
(மகனாகப்) பிறந்தவனாகிய நான் (இன்னும் உயிர் தாங்கி) இருக்கிறேன்;
என் செய்கேன் - எதைச் செய்யக் கடவேன்; என்றான் - என்று இராமன்
கூறினான்.

     அறந்தலை நின்றிலாத அரக்கனின் வஞ்சனையால் பழியைப் பெற்று,
பெற்ற தந்தையாகிய தயரதனையும், உற்ற தந்தையாகிய சடாயுவையும்
இழந்து, மகனாகிய நான் யாது செய்வது என்று தெரியாமல் தடுமாறி
நிற்கிறேன் என்றவாறு. நின்றிலாத - எதிர்மறைப் பெயரெச்சம். தீர்ந்தேன்,
துறந்தனென் - முற்றெச்சங்கள்.                                 130