3533. | என்றலும், இளைய கோ அவ் இராமனை இறைஞ்சி, 'யாண்டும், வென்றியாய்! விதியின் தன்மை பழியல விளைந்தது ஒன்றோ? நின்று இனி நினைவது என்னே? நெருக்கி அவ் அரக்கர் தம்மைக் கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந் துயர் குளிப்பது?' என்றான். |
என்றலும் - என்று இராமன் கூறிய உடனே; இளைய கோ - இளையவனாகிய இலக்குவன்; அவ் இராமனை இறைஞ்சி - அந்த இராமனை வணங்கி; வென்றியாய் - வெற்றியை உடையவனே; யாண்டும் - எப்பொழுதும்; விதியின் தன்மை - ஊழ்வினையின் தன்மையால்; பழி அல - பழி தவிர; விளைந்தது ஒன்றோ - (ஒருவனுக்கு) வந்த தீமை (ஏதாவது) உண்டோ?; இனி நின்று நினைவது என்னே - இனிமேல் நின்று (நீடு) நினைப்பதற்கு என்ன காரணம் உள்ளது; அவ் அரக்கர் தம்மை நெருக்கி- அந்த அரக்கர்களைப் (போரில்) நெருக்கிக்; கொன்ற பின் அன்றோ - கொன்ற பிறகல்லவா?; வெய்ய கொடுந்துயர் குளிப்பது - மிகக் கொடிய துன்பத்தில் மூழ்க வேண்டும்; என்றான் - (என்று இலக்குவன் இராமனிடம்) கூறினான். ஊழ்வினையால் மட்டுமே தீங்கு வரும். அத்தீங்கை நம்மால் தடுத்தலும் ஒல்லாது. எனவே துயரப் பட்டுப் பலனில்லை. செய்ய வேண்டுவது அரக்கரை நெருக்கி அழித்தலே என்றான் இலக்குவன். இப்பாடலில் அந்தாதி அமைப்பைக் காண்க. 131 |