3534. | 'எந்தை! நீ இயம்பிற்று என்னை? எண்மையன் ஆகி, ஏழைச் சந்த வார் குழலினாளைத் துறந்தனை தணிதியேனும், உந்தையை உயிர்கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லாச் சிந்தையை ஆகிநின்று, செய்வது என் செய்கை?" என்றான். |
எந்தை - என் தலைவனே; நீ எண்மையன் ஆகி - நீ எளிய தன்மையன் ஆகி; ஏழைச் சந்தவார் குழலினாளை - பேதைமை உடைய அழகிய நீண்ட கூந்தலை உடைய சீதையை; துறந்தனை தணிதியேனும் - கைவிட்டுச் (சீற்றத்) தணிவு கொள்வாய் என்றாலும்; உந்தையை - உனது தந்தையாகிய சடாயுவை; உயிர் கொண்டானை - உயிர் கொண்டவனாகிய அரக்கனை; உயிருண்ணும் ஊற்றம் இல்லா - உயிர் கொல்லும் மன வலிமை இல்லாத; சிந்தையை ஆகி நின்று - மனத்தை உடையவனாய் நின்று; செய்வது செய்கை என் - செய்யக்கூடிய செயல் எது உள்ளது; இயம்பிற்று என்னை - நீ சொல்லியது என்ன, (அது சரியல்ல); என்றான்- என்று இலக்குவன் கூறினான். சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை நீ கொல்ல வேண்டும் அவ்வாறன்றி நீ மனம் கலங்கி அவளை முற்றும் துறக்கக் கருதினை எனினும், தந்தையாகிய சடாயுவைக் கொன்ற குற்றத்துக்காகவாவது அவனைக் கொல்ல வேண்டும் என்று இலக்குவன் இராமனிடம் கூறினான். எண்மையன் - எளிய தன்மையன். ஏழை - அறியாமையாகிய பேதமைப் பண்பு உள்ளவள். சந்தம் - அழகு. வார் - நீண்ட. ஊற்றம் - வலிமை. நீ இயம்பிற்று என்னை - 'ஆண்மை தீர்ந்தேன், துறந்தனென், தவம் செய்கேனோ? துறப்பெனோ உயிரை? என் செய்கேன் இளவல்' (3532) என்று மனங் கலங்கிக் கூறியதை உட்கொண்டு உரைத்தது. 132 |