3537. ஏந்தினன் இரு கைதன்னால்;
     ஏற்றினன் ஈமம்தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்;
     தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி, கடன்
     முறை கடவாவண்ணம்
நேர்ந்தனன்-நிரம்பும் நல் நூல் மந்திர
     நெறியின் வல்லான்.

    நிரம்பும் நல்நூல் மந்திர நெறியின் வல்லான் - நிறைந்த நல்ல
நூல்களாகிய சாத்திரங்களின் முறையில் வல்லவனாகிய இராமன்; நீரும்
சாந்தொடு மலரும் சொரிந்தனன் -
நீரையும் சந்தனத்தையும் மலரையும்
(உரிய முறைப்படி) பயன்படுத்திச் (சடாயுவின் உடலுக்கு இட்டு); இருகை
தன்னால் ஏந்தினன் -
அவ்வுடலைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்து;
ஈமம் தன்மேல் ஏற்றினன் - (விறகுகள் அடுக்கப்பட்ட) ஈம மணல்
மேடையின் மேல் ஏற்றி; தலையின் சாரல் காந்து எரி கஞல மூட்டி -
தலைப் பக்கத்தில் எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து; கடன் முறை கடவா
வண்ணம் -
செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாதவாறு;
நேர்ந்தனன் - செய்தான்.

     சடாயுவின் உடலுக்கு, நீரும், சந்தனமும், மலரும் இட்டு அலங்கரித்து,
இரு கையில் ஏந்தி, ஈம மணல் மேடையில் ஏற்றித் தலைப் பக்கத்தில்
எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து, செய்ய வேண்டியவற்றை முறை தவறாது
இராமன் செய்தனன் என்க. சாரல் - பக்கம், கஞலுதல் - நெருங்குதல்.   135