3540. | பல் வகைத் துறையும், வேதப் பலிக் கடன் பலவும், முற்றி, வெல் வகைக் குமரன் நின்ற வேலையின், வேலை சார்ந்தான்- தொல் வகைக் குலத்தின் வந்தான் துன்பத்தால், புனலும் தோய்ந்து, செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன, வெய்யோன். |
வெல் வகைக் குமரன் - வெற்றி பெறும் வகையறிந்த சக்கரவர்த்தித் திருமகனாகிய இராமன்; பல்வகைத் துறையும் - நீத்தார்க்குரிய பலவகைச் சடங்குகளையும்; வேதப் பலிக் கடன் பலவும் - வேத விதிப்படி செய்ய வேண்டிய பிண்டபலி முதலிய கடமைகள் பலவற்றையும்; முற்றி நின்ற வேலையின் - முடித்து நின்ற பொழுதில்; வெய்யோன் - வெப்பம் மிக்க கதிர்களை உடைய கதிரவன்; தொல்வகைக் குலத்தின் வந்தான் - தொன்று தொட்டு வரும் சூரிய குலத்தில் தோன்றிய (இராமனது); துன்பத்தால் - (சடாயுவை இழந்த) துன்பத்துக்காக; புனலும் தோய்ந்து - (தான்) நீரில் ஆடி; செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன- (சடாயு) செல்லும் கதிக்குத் தேவையான (சடங்குகளை) எல்லாம் செய்பவன் போல; வேலை சார்ந்தான் - கடலில் (சென்று) மறைந்தான். இராமன் நீத்தார் கடன்களை முறையாகச் செய்து முடித்த வேளையில், கதிரவன் அவனது துன்பத்தைக் கண்டு பொறுக்காது தானும் புனலாடிச் சடங்கு செய்பவன் போல் கடலில் சென்று மறைந்தான் என்பதாம். தொல்வகைக் குலத்தின் வந்தான் என்பது சடாயுவைக் குறிக்கும் என்பாருமுளர். 138 |