உறக்கம் இன்றித் துயரால் நலிதல்

3542.தேன் உக அருவி சிந்தி,
     தெருமரல் உறுவ போல,
கானமும், மலையும், எல்லாம் கண்ணின்
     நீர் உகுக்கும் கங்குல்,
மானமும் சினமும் தாதை மரணமும்,
     மைந்தர் சிந்தை,
ஞானமும் துயரும் தம்முள் மலைந்தென,
     நலிந்த அன்றே.

    கானமும் மலையும் எல்லாம் - காடுகளும் மலைகளும் ஆகிய
எல்லாமும்; தெருமரல் உறுவ போல - (இராமலக்குவர் துன்பத்துக்கு)
மனச் சுழற்சி அடைபவைபோல; தேன் உக அருவி சிந்தி - தேனினையும்
அருவி நீரினையும் ஒழுக விடுவதால்; கண்ணின் நீர் உகுக்கும் - (அவை)
கண்ணீர் வெளிப்படுவது போல் வெளிப்படும்; கங்குல் - அன்று இரவிலே;
மானமும் - (சீதையை இராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட)
அவமானமும்; சினமும் - அந்த (இராவணன் மீது தோன்றிய) சினமும்;
தாதை மரணமும் - தந்தையாகிய சடாயுவின் மரணத்தால் (ஏற்பட்ட மனத்
துயரமும்); ஞானமும் - நல்லறிவும்; துயரமும் - துன்பமும்; தம்முள்
மலைந்தென -
தங்களுக்குள் (முரண்பட்டுப்) போரிட்டது போல; மைந்தர்
சிந்தை -
வலிமையுடைய இராமலக்குவர்களுடைய மனத்தில்; நலிந்த -
தாக்கி வருத்தின.

     காடும் மலையும் இராமலக்குவர் துன்பத்துக்கு வருந்துபவை போல்
தேனையும் அருவி நீரையும் சொரிந்தன. அவர்களுடைய மனத்தில்
அவமானமும், சினமும், துயரமும் மோதியது. நல்லறிவும் துன்பமும் தம்முள்
மாறுபட்டுப் போர் புரிவதைப் போல் அவர்களை வருத்தின. தெருமரல் -
மனச் சுழற்சி, "அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி" என்பர்
தொல்காப்பியனார் (தொல் சொல் உரி 13) கங்குல் - இரவு, மானம் -
அவமானம், ஞானம் - தூய அறிவு, அன்று, ஏ - அசைகள்            2