| 3543. | மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் பொய் உறு பிறவிபோல, போக்க அரும் பொங்கு கங்குல், நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர, உயிர்ப்பு நீள, கையறவு உறுகின்றாரால்; காணல் ஆம் கரையிற்று அன்றே. |
மெய் உற உணர்வு செல்லா - தத்துவ ஞானத்தின் கண் உணர்வு பொருந்தியமையாத; அறிவினை - அறிவை; வினையின் ஊக்கும் - தீவினையின் கண் செலுத்துகிற; பொய் உறு பிறவிபோல - பொய்மைத் தன்மை மிக்க பிறப்புப் போல; போக்க அரும் பொங்கு கங்குல் - நீக்க முடியாது மென் மேல் வளருகிற (அந்த) இராக்காலத்தின் கண்; உயிர்ப்பு - பெருமூச்சு; நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர - நெய் சொரியப் பெற்ற நெருப்பைப் போல மிக ஓங்கி நிற்க; நீள கை அறவு உறுகின்றார் - நீண்ட செயலறுதலை அடைகின்றார்கள்; காணல் ஆம் கரையிற்று அன்றே - (அந்நிலை நம்மால்) காணத்தகுந்த எல்லையுடையது அன்று. தத்துவஞானமுடையவரன்றிப் பிறரால் நீக்க முடியாத பிறவி போல, மன உறுதி இல்லாமையால் இராமலக்குவரின் துன்பம் நீக்க முடியாது உள்ளது என்றவாறு. பிறவியை இருளாகக் கூறும் கவி மரபை எண்ணுக. காணல் ஆம் கரையிற்று என்பதை இரவுக்கு இணைத்துத் துன்பத்தால் வருந்தும் இராமலக்குவருக்கு அவ்விரவு எல்லையில்லாது நீண்டதெனவும் கொள்ளலாம். மெய் - தத்துவ ஞானம் ஊக்கும் - உந்திச் செலுத்தும். உயிர்ப்பு - பெருமூச்சு கை அறவு - செயலற்று இருத்தல், கரை - எல்லை. உறு பிறவி - வினைத்தொகை, ஆல், ஏ - அசைகள். 3 |