3544. | யாம் அது தெரிதல் தேற்றாம்; இன் நகைச் சனகி என்னும் காமரு திருவை நீத்தோ? முகமதி காண்கிலாதோ? தே மரு தெரியல் வீரன் கண் எனத் தெரிந்த செய்ய தாமரை, கங்குற் போதும், குவிந்திலாத் தன்மை என்னோ? |
தேமரு தெரியல் வீரன் - தேன் பொருந்திய மலர் மாலையை அணிந்த வீரனாகிய இராமன்; கண் எனத் தெரிந்த - கண் என்று (சிறப்பாகச்) சொல்லப்பட்ட; செய்ய தாமரை - சிவந்த தாமரை மலர்கள்; கங்குற் போதும் - இரவுக் காலத்திலும்; குவிந்திலாத் தன்மை - குவிதல் இல்லாதிருந்த தன்மை; இன் நகைச் சனகி எனனும் - இனிய புன்முறுவலை உடைய சானகி என்னும்; காமரு திருவை நீத்தோ - விரும்பத் தகுந்த திருமகளை இழந்ததாலா?; முகமதி காண்கிலாதோ - (அவளது) முகமாகிய சந்திரனைக் காணாததாலா?; என்னோ - என்ன காரணம் என்று; அது யாம் தெரிதல் தேற்றாம் - அதை நம்மால் தெளிவாக அறியக் கூடவில்லை. சீதையைப் பிரிந்ததனாலும் அவளது முகமதி காணாததாலும் இராமனது செந்தாமரைக் கண்கள் உறங்காதது போல் இரவுக் காலத்தில் கூடத் தாமரை மலர்கள் குவியவில்லை என்றவாறு. செந்தாமரை மலரிலும் இராமபிரானது தாமரைத் திருக்கண்களிலும் உறைந்த பிராட்டியின் பிரிவு அவற்றை உறங்காமலும், குவியாமலும் செய்தன என்க. காமரு - விரும்பத்தக்க, தெரியல் - மாலை, தேற்றாம் - தன்மைப் பன்மை வினைமுற்று. முகமதி - உருவகம், ஓகாரங்கள் ஐயப் பொருள் குறித்து வந்தன. உம்மை - சிறப்புப் பொருளது. 4 |