3546.'வண்டு உளர் கோதைச் சீதை
     வாள் முகம் பொலிய வானில்
கண்டனென்' என்று, வீரற்கு,
     ஆண்டு ஒரு காதல் காட்ட,
தண் தமிழ்த் தென்றல் என்னும்
     கோள் அராத் தவழும் சாரல்,
விண்தலம் விளக்கும் செவ்வி வெண்
     மதி விரிந்தது அன்றே.

    'வண்டு உளர் கோதைச் சீதை - வண்டுகள் மொய்த்து ஒலிக்கிற
மாலையை அணிந்த சீதையினது; வாள்முகம் - ஒளியுடைய முகத்தை;
வானில் பொலியக் கண்டனென் என்று - ஆகாயத்தில் அழகு விளங்கக்
கண்டேன் என்று; வீரற்கு - வீரனாகிய இராமனுக்கு; ஆண்டு ஒரு காதல்
காட்ட -
அவ்விடத்து ஓர் ஆசையை உண்டாக்கிக் காட்டுமாறு; தண்
தமிழ்த் தென்றல் என்னும் -
குளிர்ந்த இனிமையான தென்றல் காற்று
என்று கூறப்படுகிற; கோள் அராத்தவழும் சாரல் - குறிதவறாமல்
கொள்ளும் தன்மை உள்ள பாம்பு ஊர்கிற பக்க மலையில்; விண்தலம்
விளக்கும் -
ஆகாயத்தின் இடத்தைத் தன் (ஒளியால்) விளங்கச்
செய்யக்கூடிய; செவ்வி- அழகுடைய; வெண் மதி விரிந்தது -
வெண்மையான நிலவு கதிர் வீசிப் பரவியது.

     சீதையைக் காணாது வருந்திய இராமன் அவளது திருமுகம் கண்டேன்
என்று ஆசை கொள்ளுமாறு சந்திரன் உதித்தான் என்றார். பிரிவின் கண்
பெரும் பிழை தருவது தென்றல் ஆகலின் அதனைக் கோளரவாக
உருவகித்தார். தண் தமிழ்த் தென்றல் - குளிர்ந்த இனிமை உடைய
தென்றல், தமிழ் போல் இனிய தென்றல், தமிழ் நாட்டு இனிய தென்றல்
என்று பலவாறு பொருள் தரும். தமிழ் - இனிமை என்னும் பொருளும்
தரும், தண் தமிழ்த் தென்றல் - கம்பரின் மொழிப் பற்றைத் தெளிவுறக்
காட்டும் சான்றாகும். அகத்தியப் படலத்தில்

"தழற் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்", 3, 3, 41"
"என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்" (2671)

என்று வந்துள்ள வரிகள் கம்பர் பெருமானின் தமிழ்ப் பற்றை
விளக்குவனவாகும் என்பதையும் எண்ணுக. உளர்தல் - ஒலித்தல், வாள் -
ஒளி, சாரல் - பக்க மலை. கோள் - முதல் நிலை நீண்ட தொழிற் பெயர்,
அன்றே - ஈற்றசை.                                            6