3547. | களியுடை அனங்கக் கள்வன் கரந்து உறை கங்குற்காலம் வெளிபடுத்து, உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம் - நளி இருள் பிழம்பு என்று, ஈண்டு, நஞ்சொடு கலந்த நாகத் துளை எயிற்று ஊறல் உற்றதாம் என - சுட்டது அன்றே. |
களியுடை அனங்கக் கள்வன் - மனச் செருக்குடைய உருவிலியாகிய மன்மதக் கள்ளன்; கரந்துறை கங்குற் காலம் - மறைந்து வாழுகிற இரவுக்காலத்தில்; உலகம் எங்கும் - உலகம் முழுவதிலும்; வெளிபடுத்து விளங்கிய - வெளிப்பட்டு விளங்கிய; நிலவின் வெள்ளம் - நிலவினது மிக்க ஒளி; நளி இருள் பிழம்பு என்று - செறிந்த இருள் கூட்டம் என்னும்படி; ஈண்டு நஞ்சொடு கலந்த நாக - மிகுந்து நெருங்கிய நஞ்சு சேர்ந்த நாகப் பாம்பினது; துளை எயிற்று ஊறல் - உள் துளை உடைய பல்லில் ஊறுகிற நஞ்சு; ஊற்றதாம் எனச் சுட்டது - பொருந்தியது என்னும்படி, (இராமனை) மிகுதியும் வருத்தியது. மன்மதன் செருக்குடன் மறைந்து வாழுகிற இரவுக் காலத்தில் தோன்றிய நிலவு ஒளி இராமனை நாகத் துளை எயிற்றில் இருந்து வெளிப்பட்ட நஞ்சு போல் சுட்டது என்பதாம். இருட்பிழம்பு - நஞ்சுள்ள நாகம், துளை எயிறு - பிறை நிலவு, நிலவு ஒளி - நஞ்சு என்க. களியுடை அனங்கன் - பிரிந்தவரைத் துன்பப்படுத்தி அவர் தம் வருத்தத்தில் இன்பம் காண்பவன்; காம மயக்கத்தைப் பிறக்கச் செய்யும் போதை உடையவர் எனலுமாம். அனங்கன் - உருவம் அற்றவன் (மன்மதன்) அங்க நாட்டில் உள்ள காமன் ஆச்சிரமச் சிறப்பை இராமனுக்கு உரைத்த விசுவாமித்திரர். "திங்கள் மேவும் சடைத் தேவன் மேல், மாரவேள் இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப் பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன் அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான்(339) வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள், ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம் ஆரணத்து உறையுளாய்; அங்க நாடு; இதுவும் அக் காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே (340) என்று மன்மதன் அனங்கன் ஆனதைக் கூறுவார். நளி - செறிவு, துளை எயிறு - துளை பொருந்திய நச்சுப் பல், நளி இருள் - உரிச்சொல் தொடர், இருட்பிழம்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஊறல் - தொழிலாகுபெயர். அன்றே - ஈற்றசை. 7 |