3548. | இடம்படு மானத் துன்பம், இருள்தர, எண்ணின் தீர்ந்தான் விடம் பரந்தனையது ஆய வெண் நிலா வெதுப்ப, வீரன், படம் பரந்தனைய அல்குல், பால் பரந்தனைய இன் சொல், தடம் பெருங் கண்ணினாள்தன் தனிமையை நினையலுற்றான். |
வீரன் - வீரனாகிய இராமன்; விடம் பரந்தனையது ஆய - நஞ்சு (எங்கும்) பரந்தது போன்றதாகிய; வெண் நிலா வெதுப்ப - வெள்ளிய நிலவு (ஒளியானது) (தன்னை) வருத்தவும்; இடம்படு மானத் துன்பம் இருள்தர - (தனக்கு ஏற்பட்ட) பெரிய அவமானமாகிய துன்பம் (சீதையை இராவணன் கவர்ந்து சென்றது) அறிவைக் கெடுக்கவும்; எண்ணின் தீர்ந்தான் - மற்ற எண்ணங்கள் நீங்கினவனாகி; படம் பரந்தனைய அல்குல் - பாம்பின் படம் விரிந்தது போன்ற அல்குலினையும்; பால் பரந்தனைய இன் சொல் - பாலில் (கலந்து) பரந்துள்ள இனிமை போன்ற இனிய சொற்களையும்; தடம் பெருங் கண்ணினாள் - (காதளவோடி) நீட்சி அமைந்த கண்களையும் உடையவளாகிய; தன் தனிமையை நினையலுற்றான் - (சீதை) தன் தனிமையைப் பற்றி எண்ணுபவன் ஆனான். நஞ்சு பரந்தது போல் எங்கும் நிலவு ஒளி பரவித் தன்னை வருத்துதலால் இராமன் மானத் துன்பம் அறிவை அழிக்க வேறு ஒரு நினைவும் இன்றிச் சீதையின் தனிமை குறித்து எண்ணத் தொடங்கினான். 8 |