3550. | ' "வாங்கு வில்லன் வரும், வரும்" என்று, இரு பாங்கும், நீள் நெறி பார்த்தனளோ?' எனும் - வீங்கும் வேலை விரி திரை ஆம் என, ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான். |
வேலை வீங்கும் விரிதிரை ஆம் என - கடலில் மிகுந்து வருகின்ற பரந்த அலைகள் ஆகும் என்று சொல்லும் படியாக; ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் - மேலும் மேலும் மிகுந்து அடங்குகிற பெருமூச்சினை உடையவனாகிய (இராமன்); வாங்கு வில்லன் வரும் வரும் என்று - (இராவணனிடம் இருந்து தன்னை மீட்க) வளைந்த வில்லினை உடைய (கணவன்) வருவான் வருவான் என்று நினைத்து; இருபாங்கும் நீள் நெறி பார்த்தனளோ - இரு பக்கங்களிலும் உள்ள நீண்ட வழியைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ?; எனும் - என்று எண்ணினான். கடல் அலை போல் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்ட இராமன் வருவான் வருவான் என்று சீதை இரு பக்கங்களிலும் உள்ள நீண்ட வழியைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ என்று எண்ணினான். 'சுருதி நாயகன் வரும் வரும்' என்பது ஓர் துணிவால் கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் (5077) என்ற கவிக்கூற்று இங்கு ஒப்பிடத்தக்கது. வாங்குதல் - வளைத்தல், பாங்கு - பக்கம், நெறி - வழி, வரும் வரும் - அடுக்குத் தொடர்; வருவது உறுதி என்ற பொருள் குறித்தது. ஓங்கி ஓங்கி - அடுக்குத் தொடர் இடையீடு இல்லாமல் என்ற பொருளது. 10 |