3553. பூண்ட மானமும், போக்க
     அருங் காதலும்,
தூண்ட நின்று, இடை
     தோமுறும் ஆர் உயிர்,
மீண்டு மீண்டு
     வெதுப்ப, வெதும்பினான்,
'வேண்டுமோ எனக்கு இன்னமும்
     வில்?' என்பான்.

    பூண்ட மானமும் - (இராவணன் சீதையைக் கவர்ந்ததால்) தனக்கு
ஏற்பட்ட அவமானமும்; போக்க அருங்காதலும் - (அவள் மீது கொண்ட)
நீக்க முடியாத காதலும்; தூண்ட - தூண்டுதலினால்; இடைநின்று -
நடுவில் நின்று; தோமுறும் - துன்பம் அடைகிற; ஆர் உயிர் - (தன்)
அருமையான உயிரை; மீண்டு மீண்டு வெதுப்ப - (அவை -
அவமானமும், காதலும்) மாறி மாறி வருத்துவதனால்; வெதும்பினான் -
மனம் வருந்தினவனாகிய (இராமன்); எனக்கு இன்னமும் வில்
வேண்டுமோ என்பான் -
எனக்கு இனிமேலும் (கையில்) வில்
வேண்டுமோ என்று கூறினான்.

     அவமானமும் காதலும் தேய் புரிப் பழங்கயிற்றைப் பற்றிய இரு
யானைகள் போலத் தன் உயிரை அலைக்கழித்தலால் பெருந்துன்பம்
கொண்ட இராமன், சீதையைக் காப்பாற்ற உதவாத வில் இன்னமும் என்
கையில் வேண்டுமோ என்றான். தோமுறுதல் - துன்பம் அடைதல்.      13