3554.வில்லை நோக்கி நகும்;
     மிக வீங்கு தோட்
கல்லை நோக்கி நகும்;
     கடைக்கால் வரும்
சொல்லை நோக்கித்
     துணுக்கெனும் - தொல் மறை
எல்லை நோக்கினர்
     யாவரும் நோக்குவான்.

    தொல் மறை எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் -
பழமையான வேதங்களின் முடிவை அறிந்தவர்கள் எல்லாம் (இவனே பரம்
பொருள் என்று) நோக்கி நிற்கிற தன்மையுள்ள இராமன்; வில்லை நோக்கி
நகும் -
(தன் கையில் உள்ள) வில்லைப் பார்த்து (இது பயன்படவில்லையே
எனச்) சிரிப்பான்; மிக வீங்கு தோட் கல்லை நோக்கி நகும் - மிகப்
பருத்த தன் தோளாகிய கல்லைப் பார்த்து (இதன் வலிமை சீதையைக்
காக்கவில்லையே) என்று சிரிப்பான்; கடைக்கால் வரும் சொல்லை
நோக்கித் துணுக்கெனும் -
முடிவில் (மனைவியைக் காக்க இயலாதவன்)
என்று தனக்கு வருகின்ற பழிச் சொல்லை எண்ணிப் பார்த்துத்
திடுக்கிடுவான்.

     வேதாந்த வித்தகர்களால் பரம் பொருள் இவனே என்று உணரப்பட்ட
இராமன், தன் மனைவியைக் காத்தற்குப் பயன்படாத தன் வில்லையும்
தோளையும் பார்த்துச் சிரித்து, இறுதியில் தனக்கு வரும் பழிச் சொல்லை
எண்ணித் திடுக்கிட்டான் என்க. கடைக்கால் - முடிவில், துணுக்கெனல் -
வருந்தித் திடுக்கிடல். தோட்கல் - உருவகம், கல் - ஆகுபெயர்.        14