3555. | கூதிர் வாடை வெங் கூற்றினை நோக்கினன்; 'வேத வேள்வி விதிமுறை மேவிய சீதை என்வயின் தீர்ந்தனளோ?' எனும் - போதகம் எனப் 'பொம்' என் உயிர்ப்பினான். |
போதகம் எனப் பொம் என் உயிர்ப்பினான் - யானைக் கன்று போலப் பொம் என்ற ஒலியுடன் பெருமூச்சு விடுபவனாகிய (இராமன்); கூதிர் வாடை வெங் கூற்றினை நோக்கினன் - கூதிர் கால வாடைக் காற்றாகிய கொடுமையான யமனை நோக்கிய காரணத்தால்; 'வேத விதிமுறை வேள்வி மேவிய - வேதங்களில் கூறப்பட்டுள்ள விதிகளின் முறைப்படி (செய்த) மணச் சடங்கினால் (யான்) மணந்து பெற்ற; சீதை என்வயின் தீர்ந்தனளோ - சீதை என்னிடத்தில் இருந்து நீங்கி விட்டாளோ?; எனும் - என்பான். சீதையின் பிரிவினைக் கூதிர்க் கால வாடைக் காற்று உணர்த்த உணர்ந்த இராமன். அறிவுத் தடுமாற்றத்தால் 'சீதை என்னை விட்டு நீங்கி விட்டாளோ' என்றான் - என்பதாம். வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று. வேள்வி - இங்கே திருமணச் சடங்கு, போதகம் - யானைக் கன்று. பொம் - ஒலிக்குறிப்பு. வாடை வெங் கூற்று - உருவகம். நோக்கினன் - முற்றெச்சம். 15 |