3556. | 'நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான், என் துணைக் குல மங்கை ஓர் ஏந்திழை- தன் துயர்க்குத் தகவு இலென் ஆயினேன்; நன்று நன்று, என் வலி!' என, நாணுமால். |
'நின்று - (அரக்கர்களை எதிர்த்து) நின்று; பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் - (உலகில் உள்ள) எல்லா உயிர்களையும் காப்பாற்றுவதற்கு உடன்பட்ட நான்; ஓர் ஏந்திழை என் துணைக் குலமங்கை தன் - சிறந்த அணிகலன்களை அணிந்த என் மனைவியாகிய ஒரு குலப் பெண்ணினது; துயர்க்குத் தகவு இலென் ஆயினேன் - துன்பத்தை நீக்குவதற்குத் தகுதியுடையவன் அல்லேன் ஆயினேன்; என் வலி நன்று நன்று - என் வலிமை மிக நன்றாய் இருக்கிறது; என நாணும் - என்று (எண்ணி) நாணமடைவான். உலகெலாம் காக்க ஒருப்பட்ட நான் ஒரு பெண்ணின் துயர் காக்க முடியாதவன் ஆய்விட்டேன். என் வலிமை நன்று நன்று என இராமன் நாணம் கொண்டான். பல்லுயிர் காத்தற்கு நேர்தல்- "சூர் அறுத்தவனும், சுடர் நேமியும், ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர் என்றான். (2652) என்ற பாடல் கொண்டு அறிக. நன்று நன்று - அடுக்குத் தொடர் இகழ்ச்சி பற்றி வந்தது. ஆல் - ஈற்றசை. 16 |