3557.சாயும், தம்பி திருத்திய
     தண் தளிர்;
தீயும், அங்கு அவை; தீய்தலும்,
     செவ் இருந்து
ஆயும்; ஆவி
     புழுங்க அழுங்குமால்-
வாயும் நெஞ்சும்
     புலர மயங்குவான்.

    வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் - வாயும் மனமும் வறண்டு
மயக்கமுற்றவனாகிய (இராமன்); தம்பி திருத்திய தண் தளிர் சாயும் -
(தன்) தம்பியாகிய இலக்குவன் (தேடிப்படுப்பதற்காகத்) திருத்திய குளிர்ந்த
தளிர்க் குவியலில் சாய்ந்து படுப்பான்; அங்கு அவை - அப்பொழுது
அத்தளிர்கள்; தீயும் - (இராமனின் உடல் வெப்பத்தால்) தீய்ந்து போகும்;
தீய்தலும் - (அவ்வாறு அப்படுக்கையாகிய தளிர்கள்) தீய்ந்த உடனே;
செவ் இருந்து ஆயும் - சாயாது நேரே நிமிர்ந்து அமர்ந்து எண்ணுவான்;
ஆவி புழுங்க அழுங்கும் - உயிர் உருகிப் புழுங்கச் சோர்வான்.

     சீதையின் பிரிவால் வருந்தும் இராமனுக்கு இலக்குவன் தளிர்ப்
படுக்கையை அமைக்க, அதில் படுத்தவுடன் அத்தளிர்கள் தீய்ந்து
போனதால், அவன் நேரே நிமிர்ந்து அமர்ந்து பலவாறு எண்ணி உயிர்
உருகப் புழுங்கிச் சோர்ந்தான் என்க. ஆல் - அசை.                 17