3558.பிரிந்த ஏதுகொல்?
     பேர் அபிமானம்கொல்?
தெரிந்தது இல்லை; திரு
     மலர்க்கண் இமை
பொருந்த, ஆயிரம்
     கற்பங்கள் போக்குவான்;
இருந்தும் கண்டிலன்;
     கங்குலின் ஈறுஅரோ.

    திரு மலர்க்கண் இமை - அழகிய தாமரை மலர் போன்ற (தன்)
கண்களின் இமைகள், (இமைக்கும் காலத்தில்); ஆயிரம் கற்பங்கள்
பொருந்தப் போக்குவான் -
ஆயிரம் கற்பாந்த காலங்களை முழுதும்
பொருந்தக் கழிப்பவனாகிய (இராமன்); இருந்தும் கங்குலின் ஈறு
கண்டிலன் -
(தம்பியமைத்த தளிர்ப் படுக்கையில்) இருந்தும் இரவினது
முடிவைக் காணாதவனானான்; பிரிந்த ஏதுகொல் - (இந்நிலைமைக்குச்)
சீதையைப் பிரிந்தது காரணமோ?; பேர் அபிமானம் கொல் - (அவளிடம்
கொண்ட) பெருங்காதலாலா?; தெரிந்தது இல்லை - (உரிய காரணம்)
தெரியவில்லை.

     திருமலர்க்கண் இமைப்பில் ஆயிரம் கற்பங்கள் போக்கும் இராமனுக்கு,
சீதை பிரிவால் ஓர் இரவைக் கூடக் கழிக்க முடியவில்லை என்றவாறு.
இதனால் இறைவன் காலங்கடந்தவன் என்பதை விளங்கினார். 'காலமும்
கணக்கும் நீத்த காரணன்' (5884) என்றார் பிறாண்டும், அரோ - அசை.  18