3561.'நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து,
ஆணி ஆய பழி வர, அன்னது
நாணி, நாடு கடந்தனனாம்கொலோ,
சேண் உலாம் தனித் தேரவன்?' என்னுமால்.

    சேண் உலாம் தனித் தேரவன் - நீண்டுள்ள (வானத்தில்) உலா
வருகிற ஒப்பற்ற தனித் தேரை உடைய கதிரவன்; நீள் நிலாவின் இசை
நிறை -
(ஒளி மிகுந்த) நிலவை ஒத்துப் புகழ் நிறைந்த; தன் குலத்து - தன்
குலத்துக்கு; ஆணி ஆய பழி வர - அடிப்படையாகிய பழி வந்ததனால்;
அன்னது நாணி - அப்பழிக்கு நாணம் கொண்டு; நாடு கடந்தனனாம்
கொலோ -
நாட்டு மக்களின் கண் காணாத இடத்துக்குச் சென்று விட்டான்
போலும்; என்னும் - என்று (இராமன்) சொன்னான்.

     நீண்ட நேரம் இரவு கழியாமை கண்ட இராமன், சூரிய குலத்திற்கு
ஏற்பட்ட பழிக்கு நாணம் கொண்டு கதிரவன் கண் காணாத இடத்துக்குச்
சென்று விட்டானோ என்றான். இப்பாடல் இரவு நீண்டு கழியாமைக்குக்
காரணம் கூறுகிறது. நீள் நிலாவின் இசை - புகழுக்கு வெண்ணிறத்தை
உரியதாகக் கூறுதல் மரபாதலின் அதற்கு நிலவை உவமை கூறினார் என்பர்
வை. மு. கோ. இசை - புகழ். ஆணி - அச்சாணி, அடிப்படை. சீதையை
இராவணன் கவர்ந்து சென்றது சூரிய குலத்துக்கு ஏற்பட்ட ஆணி ஆய பழி
என்க. ஓ, ஆல் - அசைகள்.                                   21