3562. | சுட்ட கங்குல் நெடிது எனச் சோர்கின்றான், 'முட்டு அமைந்த நெடு முடக்கோனோடு கட்டி, வாள் அரக்கன், கதிரோனையும் இட்டனன் கொல் இருஞ்சிறை?' என்னுமால். |
சுட்ட கங்குல் நெடிது எனச் சோர்கின்றான் - (தன்னைச்) சுட்டு வருத்திய இரவு மிக நீண்டது என்று மனந்தளர்பவனாகிய (இராமன்); "வாள் அரக்கன் - வாளை ஏந்திய அரக்கனாகிய இராவணன்; முட்டு அமைந்த நெடு முடக் கோனோடு - கடிவாளத்தைக் கையில் கொண்ட பெரிய அருணனோடு; கதிரோனையும் - கதிரவனையும்; கட்டி - (தன் ஆற்றலால்) கட்டி; இருஞ் சிறை இட்டனன் கொல் - பெரிய சிறையில் அடைத்திட்டானோ?; என்னும் - என்று (இராமன்) எண்ணினான். இரவு நீள்தற்கு உரிய காரணம் என்ன என்று மேலும் எண்ணிய இராமன் ஒரு வேளை இராவணன் கதிரவனை அவனுடைய தேர்ப் பாகன் ஆகிய அருணனுடன் ஒரு சேரக் கட்டிச் சிறையில் இட்டுவிட்டானோ என்றான். முட்டு - கடிவாளம். முடக்கோன் - அருணன்; இவன் தொடை இல்லாதவன் ஆகவே இவ்வாறு கூறப்பட்டது. சுட்ட - செய்த எனும் வாய்பாட்டுப் பெயரெச்சம். சோர்கின்றான் - வினையாலணையும் பெயர். ஆல் - அசை. 22 |