3563. | 'துடியின் நேர் இடை தோன்றலளாம்எனின், கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் முடியும்ஆகின், முடியும், இம் மூரி நீர் நெடிய மா நிலம்' என்ன, நினைக்குமால். |
துடியின் நேர் இடை - உடுக்கையை ஒத்த இடையை உடைய சீதை; தோன்றலளாம் எனின் - (இரவு விடிவதற்குள்) என் முன் தோன்றாமல் போனாள் எனின்; கடிய கார் இருள் கங்குலின் - (அந்நிலையிலேயே இந்தக்) கொடிய கரிய இருளை உடைய இரவாகிய; கற்பம் போய் முடியும் ஆகின் - நீண்ட காலம் முடிந்து (விடியல் வரும்) என்றால்; இம்மூரிநீர் நெடிய மாநிலம் - இந்த வலிய கடலால் சூழப்பட்ட மிகப் பெரிய உலகம்; முடியும் - (என் ஆற்றலால்) அழிந்து விடும்; என்ன நினைக்கும் - என்று (இராமன்) எண்ணுவான். ஆல் - ஈற்றசை. சீதை இந்த நீண்ட கங்குற் கற்பம் முடிவதற்குள் வராமல் போய் விடிவு வந்தால் இவ்வுலகத்தை அழித்து விடுவேன் என்று கூறி இராமன் சினம் கொண்டனன் என்க. துடி - உடுக்கை, கற்பம் - நீண்ட காலம், கற்பாந்த காலம் என்ப. மூரி - வலிமை. மூரி நீர் - கடல், நேர் - உவமை உருபு; நேர நேர் என வந்தது. மூரி நீர் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 23 |