3564.'திறத்து இனாதன, செய்
     தவத்தோர் உற
ஒறுத்து, ஞாலத்து உயிர்தமை
     உண்டு, உழல்
மறத் தினார்கள்
     வலிந்தனர் வாழ்வரேல்,
அறத்தினால் இனி ஆவது
     என்?' என்னுமால்.

    திறத்து - (தம்) வலிமையினால்; செய்தவத்தோர் இனாதன உற -
தவம் செய்யும் முனிவர்கள் பெருந்துன்பம் அடைய; ஒறுத்து -
(அவர்களைத்) தண்டித்து; ஞாலத்து உயிர்தமை - உலகத்தில் உள்ள
உயிர்களை; உண்டு - (அழித்து) உண்டு; உழல் மறத்தினார்கள் -
வாழ்ந்து திரிகிற அறமில்லாதவர்கள்; வலிந்தனர் வாழ்வரேல் -
(பெண்களைக் கவர்ந்தும் கூட) வலிமை பெற்று வாழ்வார்களானால்; இனி
அறத்தினால் ஆவது என் -
இனிமேல் அறத்தினால் ஆகும் பயன்
எதுவோ?'; என்னும் - என்று சொல்லுவான். ஆல் - ஈற்றசை.

     அறத்தவர் வருந்த மறத்தவர் வெற்றி பெற்று மகிழ்வுடன் வாழும்
நிலையில் அறத்தினால் விளையும் பயன் யாதோ? என இராமன்
வருந்தினான் என்க. திறத்து - வலிமையால், இன்னாதன - துன்பங்கள்.   24