3566. | உழந்த யோகத்து ஒரு முதல் கோபத்தால் இழந்த மேனியும் எண்ணி இரங்கினான் - கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ, பழந் துயர்க்குப் பரிவுறும் பான்மையால்? |
பழந்துயர்க்கு - முன்பு தனக்கு ஏற்பட்ட துன்பத்துக்கு; பரிவுறும் பான்மையால் - வருந்துகிற தன்மையால்; கெழுந்தகைக்கு - தன்னிடம் பொருந்தி உள்ள குணத்துக்கு; ஒரு வன்மை கிடைக்குமோ - ஒரு உறுதி கிடைக்குமோ? (கிடைக்காது என்றபடி); யோகத்து உழந்த ஒரு முதல் கோபத்தால் - யோகத்தை மிகுதியாகச் செய்த ஒப்பற்ற முதல்வனாகிய சிவனது சினத்தால்; இழந்த - (சாம்பலாகி முன்பு தான்) இழந்து விட்ட; மேனியும் எண்ணி - உடம்பை நினைத்து; இரங்கினான் - வருந்தினான். தனக்கு முன்பு ஏற்பட்ட துயரத்தை நினைத்து வருந்துவதால் தன்னிடம் உள்ள குணத்துக்கு ஒரு வலிமை கிடைக்குமோ? கிடைக்காது எனினும் முன்பு சிவனின் முன் தோன்றிக் காம அம்பு எய்து அவனது ஆற்றலால் மேனியை இழந்த மன்மதன். இப்போது இராமன் மீது மலர்க்கணை எய்யும் நிலையில் பழந்துயரை நினைத்தலால் மன வலிமை கிடைத்து விட்டவன் போல் செயல்பட்டான் என்க. ஒரு முதல் - தனி முதல்வனாகிய சிவன். கெழுந்தகை - பொருந்திய குணம், உரிமை எனினுமாம். பரிவுறுதல் - வருந்துதல். 26 |