3567. | நீலமான நிறத்தன் நினைந்தவை சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில், மூல மா மலர் முன்னவன் முற்றுறும் காலம் ஆம் என, கங்குல் கழிந்ததே. |
நீலமான நிறத்தன் - நீலமான நிறத்தை உடைய இராமன்; நினைந்தவை - (சீதையைப் பிரிந்த துன்பத்தால் மனத்தில்) நினைந்த எண்ணங்கள்; சூலம் ஆக - சூலம் போல; தொலைவுறும் எல்லையில் - (வருத்த) அழிக்க முயலும் நேரத்தில்; மூல மாமலர் முன்னவன் - (எல்லாப் பொருள்களுக்கும்) மூல காரணமான நாபிக் கமலத்தில் தோன்றிய முதல் கடவுளான பிரமன்; முற்றுறும் - முடிகிற; காலம் ஆம் என - ஊழிக் காலம் (கழிந்தது) ஆம் என்று சொல்லுமாறு; கங்குல் கழிந்ததே - இரவுப் பொழுது நீங்கிற்று. இராமனுக்கு ஏற்பட்ட பிரிவுத் துயரின் கொடுமையைக் கூறுவதற்காக, இரவு சூலமாகவும், அது கழிதற்கு ஆன கால நீட்சி பிரம கற்பம் போல் மிக நீண்டதாகவும் கூறப்பட்டது. தொலைவுறுதல் - அழிதல், முன்னவன் - பிரமன். 27 |