அறுசீர் ஆசிரிய விருத்தம்

3568.வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும்
     துயிலை வெறுத்து, அளியும்
கள்ளும் சிலம்பும் பூங் கோதைக்
     கற்பின் கடலில் படிவாற்கு,
புள்ளும் சிலம்பும்; பொழில் சிலம்பும்;
     புனலும் சிலம்பும்; புனை கோலம்
உள்ளும் சில் அம்பும் சிலம்பாவேல்,
     உயிர் உண்டாகும் வகை உண்டோ?

    வெள்ளம் சிலம்பு பாற்கடலின் - வெள்ளம் ஒலிக்கிற திருப்பாற்
கடலில்; விரும்பும் துயிலை வெறுத்து - விரும்பி(த் துயிலுகிற) தூக்கத்தை
வெறுத்து; அளியும் கள்ளும் சிலம்பும் பூங்கோதை - வண்டுகளும்
(அவ்வண்டுகள் வரக் காரணமான) தேனும் ஒலிப்பது போல் தோன்றும்
மலர்களால் ஆகிய மாலையை அணிந்த கூந்தலை உடைய சீதையினது;
கற்பின் கடலில் படிவாற்கு - கற்பாகிய கடல் முழுகியவனாகிய
இராமனுக்கு; புள்ளும் சிலம்பும் - (இரங்கிப்) பறவைகளும் ஒலிக்கும்;
பொழில் சிலம்பும் - சோலைகளும் ஒலிக்கும்; புனலும் சிலம்பும் -
தண்ணீரும் (அருவி நீர், ஆற்று நீர் முதலியன ஒலிக்கும்; புனை கோலம்
உள்ளும் -
இராமன் கொண்ட போர்க் கோலத்தின் (போது)
(அம்பறாத்தூணியில்) இருந்த; சில் அம்பும் - சில அம்புகள்;
சிலம்பாவேல் - (ஒன்றோடு ஒன்றுபட்டு) ஒலிக்காவிட்டால்; உயிர்
உண்டாகும் -
இராமனின் உயிர் அழியாது நிற்பதற்கு; வகை உண்டோ -
வழி உள்ளதோ.

     விடியற்காலையில் தோன்றிய ஒலிகள் இராமனின் துயர் கண்டு இரங்கி
ஒலித்த ஒலிகள் என்று தற்குறிப்பேற்றமாகக் கூறப்பட்டன. பாற்கடலில்
பள்ளி கொண்ட பரமனே சீதையின் கற்புக் கடல் படிவான் என அவதார
நிகழ்வு கூறினார். அளி - வண்டு. கள் - தேன். சிலம்புதல் - ஒலித்தல்.
புனை கோலம் - இராமன் கொண்ட போர்க் கோலம். சில் அம்பு - சில
அம்புகள். பூங்கோதை - உவமையாகுபெயர். சொற் பொருள் பின் வரு
நிலை அணி காண்க.                                          28