3569. | மயிலும் பெடையும் உடன் திரிய, மானும் கலையும் மருவி வர, பயிலும் பிடியும் கட களிறும் வருவ, திரிவ, பார்க்கின்றான்; குயிலும், கரும்பும், செழுந் தேனும், குழலும், யாழும், கொழும் பாகும், அயிலும் அமுதும், சுவை தீர்த்த மொழியைப் பிரிந்தான் அழியானோ? |
பெடையும் மயிலும் உடன் திரிய - பெண் மயிலும் ஆண் மயிலும் (ஒன்றாக மகிழ்ச்சியோடு) திரிய; மானும் கலையும் மருவி வர - பெண் மானும் ஆண் மானும் நெருங்கித்திரிய; பயிலும் பிடியும் கடகளிறும் - விளையாடி வருகிற பெண் யானையும் மதம் மிக்க ஆண் யானையும் (ஆகிய இவை); வருவ திரிவ பார்க்கின்றான் - (தன் எதிரே) வந்து திரிவதை இராமன் பார்க்கின்றான்; குயிலும் - குயிலின் குரலோசையும்; கரும்பும் - கரும்புச் சாற்று இனிமையும்; செழுந்தேனும் - முற்றிய தேனின் சுவையும்; குழலும் - குழலின் இசை இனிமையும்; யாழும் - யாழிசையின் இனிமையும்; கொழும்பாகும் - (முற்றக் காய்ச்சிய) கொழுமையான சர்க்கரைப் பாகின் சுவையும்; அயிலும் அமுதும் - (அனைவரும் விரும்பி) உண்ணும் அமுதத்தின் சுவையும்; சுவை தீர்த்த - (ஆகிய இவற்றின் சுவையையும் இனிமையையும்) தன் குரல் இனிமைக்கு முன் இனிமையே இல்லை என்று தீர்த்த; மொழியைப் பிரிந்தான் - இனிய சொல்லை உடைய சீதையைப் பிரிந்தவனாகிய இராமன்; அழியானோ - வருத்தப்படாமல் இருப்பானோ. காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்பது போல் இணையாக இராமன் முன் திரிந்த மயில், மான், களிறு ஆகியவை அவனது பிரிவுத் துயரத்தை மிகுவித்தன என்றபடி. கலை - ஆண்மான், பிடி - பெண் யானை கடகளிறு - மதம் மிக்க ஆண் யானை. மொழி - முதலாகு பெயர். சீதையின் பேச்சினிமையைக் கூறும் பகுதியின் சிறப்பை எண்ணுக. குயில், கரும்பு, குழல், யாழ் - இனிமையும் சுவையும் குறித்து வந்தன. பண்பாகு பெயர்கள். 29 |