3570. | முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் - முது கங்குல் விடி நாள் கண்டும், கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு, 'ஆண்டு, அடிநாள், செந் தாமரை ஒதுங்கும் அன்னம் இலளால், யான் அடைத்த கடி நாள் கமலத்து' என அவிழ்த்துக் காட்டுவான்போல், கதிர் வெய்யோன். |
கதிர் வெய்யோன் - கதிர்களை உடைய கதிரவன்; முது கங்குல் விடி நாள் கண்டும் - நீண்டிருந்த இரவு (முடிந்து தோன்றிய) பகல் பொழுதைப் பார்த்தும்; கிளி மிழற்றும் மென் சொல்கேளா - கிளி போல் பேசுகிற (சீதையின்) இனிய சொல்லைக் கேட்காத; வீரற்கு - வீரனாகிய இராமனுக்கு; ஆண்டு - அப்பொழுது; யான் அடைத்த கடிநாள் கமலத்து - (யான்) முதல் நாளில் மூடிய மணம் மிக்க தாமரை மலரில்; அடிநாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் - முற்காலத்துத் தாமரை மலரில் தோன்றிய அன்னப் பறவை போன்ற சீதை; இலன் - (இப்போது என்னிடம்) இல்லை; என - என்று; அவிழ்த்துக் காட்டுவான் போல் - விரித்துக் காட்டுபவன் போல்; முடி நாட்டிய கோட்டு உதயத்து - முடி நாட்டியது போல் அமைந்த உச்சியை உடைய உதய கிரியில்; முற்றம் உற்றான் - முழுமையாக விளங்கித் தோன்றினான். ஆல் - ஈற்றசை. சூரியனைக் கண்டு தாமரை மலர்வதை முன்பு தாமரையில் தோன்றிய திருமகளின் அவதாரமாகிய சீதை இப்பொழுது அம்மலரில் இல்லை என்று இராமனுக்குக் காட்டுவதற்காகக் கதிரவன் அத்தாமரை மலர்களை விரித்துக் காட்ட உதயகிரியில் தோன்றினான் என்றார். தற்குறிப்பேற்ற அணி. முடி - உச்சி. கோடு - மலை. அடிநாள் - முன்னாள். அன்னம் - உவமையாகு பெயர். 30 |