3571.பொழிலை நோக்கும்; பொழில் உறையும்
     புள்ளை நோக்கும்; பூங்கொம்பின்
எழிலை நோக்கும்; இள மயிலின்
     இயலை நோக்கும்; இயல்பு ஆனாள்
குழலை நோக்கி, கொங்கை இணைக்
     குவட்டை நோக்கி, அக் குவட்டின்
தொழிலை நோக்கி, தன்னுடைய தோளை
     நோக்கி, நாள் கழிப்பான்.

    பொழிலை நோக்கும் - (இராமன் அங்குள்ள) சோலையைப்
பார்ப்பான்; பொழில் உறையும் புள்ளை நோக்கும் - அச் சோலைகளில்
வாழ்கின்ற சக்கர வாகப் பறவைகளைப் பார்ப்பான்; பூங்கொம்பின் எழிலை
நோக்கும் -
அங்குள்ள பூங்கொம்புகளின் அழகைப் பார்ப்பான்; இள
மயிலின் இயலை நோக்கும் -
இள மயிலினது சாயலைப் பார்ப்பான்;
இயல்பு ஆனாள் - அவற்றின் இயல்புகள் எல்லாம் தன்னியல்பாக
ஆனாளாகிய சீதையினது; குழலை நோக்கி - கருங் கூந்தலை எண்ணியும்;
கொங்கை இணைக் குவட்டை நோக்கி - கொங்கைகளாகிய இரு
மலைகளை எண்ணியும்; அக்குவட்டின் தொழிலை நோக்கி - அக்
கொங்கைகளின் மேல் எழுதப்பட்டுள்ள (தொய்யில்) தொழிலைக் கருதிப்
பார்த்தும்; தன்னுடைய தோளை நோக்கி - அக் கொங்கைகளில்
அணைதல் இல்லாத தன் தோளைப் பார்த்தும்; நாள் கழிப்பான் -
நாட்களைக் கழிப்பவன் ஆயினான்.

     நோக்கிய காட்சிகளிலெல்லாம் சீதையின் உறுப்புகளையே இராமன்
கண்டான் என்றார். சோலை சீதையின் கருங்கூந்தலாகவும், அச்சோலையில்
உள்ள சக்கரவாகப் பறவை அவளது இணைக் கொங்கைகளாகவும்,
பூங்கொம்பின் எழில் கொங்கையில் எழுதப்பட்ட தொய்யிலாகவும், இள
மயிலின் இயல் சீதையின் சாயலாகவும் இராமனுக்குக் காட்சியளித்தன
என்றார். புள் - பறவை; இங்கே சக்கரவாகப் பறவை. இயல் - சாயல்.
குவடு- மலை. குவட்டின் தொழில் - தொய்யில் (கலவிக் காலத்தே முலை
மேல்எழுதப்படும் சித்திரங்கள்).                                 31