சீதையைக் கவர்ந்த அரக்கனைத் தேடல்

3572. அன்னகாலை, இள வீரன், அடியின்
     வணங்கி, 'நெடியோய்! அப்
பொன்னை நாடாது, ஈண்டு இருத்தல்
     புகழோ?' என்ன, புகழோனும்,
'சொன்ன அரக்கன் இருக்கும் இடம்
     துருவி அறிதும் தொடர்ந்து' என்ன,
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த
     வெயில் வெங் கானம் போயினரால்.

    இள வீரன் - இளைய வீரனாகிய இலக்குவன்; அன்ன காலை -
அப்பொழுது; அடியின் வணங்கி - (இராமனது) அடிகளில் வணங்கி;
'நெடியோய் - (புகழில்) பெரியவனே; அப்பொன்னை நாடாது - அந்தச்
சீதையைத் தேடாமல்; ஈண்டு இருத்தல் புகழோ - இவ்வாறு இங்கு
(வீணாக) இருப்பது புகழைத் தரும் செயலோ?'; என்ன - என்று கூற;
புகழோனும் - புகழ் மேம்பட்ட இராமனும்; 'சொன்ன அரக்கன் - (சடாயு)
சொல்லிய அரக்கன்; இருக்கும் இடம் - இருக்கின்ற இடத்தைத்;
தொடர்ந்து துருவி அறிதும் - (நாம்) தொடர்ந்து சென்று தேடிக்
காண்போம்; என்ன - என்று சொல்ல; மின்னும் சிலையார் - (அதற்குப்
பிறகு) ஒளி பொருந்திய வில்லைக் கையில் ஏந்திய வீரர்களான
இராமலக்குவர்கள் (இருவரும்); மலை தொடர்ந்த வெயில் வெங்கானம் -
மலைகள் தொடர்ச்சியாக அமைந்த வெயிலால் வெப்பமடைந்த காட்டு
(வழியில்); போயினர் - சென்றார்கள்.

     ஆல் - அசை.                                          32