கலி விருத்தம் 3573. | ஆசை சுமந்த நெடுங் கரி அன்னார் பாசிலை துன்று வனம் பல பின்னா, காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார்; யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார். |
ஆசை சுமந்த நெடுங்கரி அன்னார் - திசைகளைத் தாங்குகிற பெரிய திசை யானைகளை ஒத்தவர்களாகிய இராமலக்குவர்; பாசிலை துன்று வனம் பல பின்னா - பசிய இலைகள் நெருங்கிய காடுகள் பல பின்னாக (நடந்து சென்று); காசு அறு குன்றினோடு - குற்றம் இல்லாத மலைகளையும்; ஆறு கடந்தார் - ஆறுகளையும் கடந்தவர்களாகி; ஒன்பதொடு ஒன்பது யோசனை சென்றார் - பதினெட்டு யோசனை (தூரம்) சென்றார்கள். இராமலக்குவர் நடந்து சென்று பதினெட்டு யோசனை தூரம்கடந்தனர் என்க. ஆசை - திசை. துன்றுதல் - நெருங்குதல்; காசு - குற்றம்.அன்னார்- குறிப்பு வினையாலணையும் பெயர். பாசிலை - பண்புத்தொகை. கடந்தார் - முற்றெச்சம். 33 |