3574. மண்படி செய்த தவத்தினில் வந்த
கள் படி கோதையை நாடினர், காணார்,
உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க,
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார்.

    மண்படி செய்த தவத்தினில் - (அவர்கள்) மண்ணுலகு செய்த
தவத்தினால்; வந்த - (அதனிடமிருந்து) வந்த; கள் படி கோதையை -
தேன் பொருந்திய மாலையை அணிந்த சீதையை; நாடினர் காணார் -
தேடிக் காணாதவர்களாகி; உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க -
மனத்தில் படிந்திருந்த சினம் பெருமூச்சோடு (பொங்கி) வெளிப்பட; புள்
படியும் குளிர் வார் பொழில் -
பறவைகள் தங்குகிற குளிர் (மிகுந்த)
பெரிய சோலையின் கண்; புக்கார் - புகுந்தார்கள்.

     இராமலக்குவர் சீதையைத் தேடிக் காணாமல் சினமும் பெருமூச்சும்
வெளிப்பட ஒரு சோலைக் கண் சென்று தங்கினர் என்பதாம். மண் படி -
மண்ணுலகு. வார் - நீண்ட, பெரிய. காணார் - முற்றெச்சம்.          34