3575. | ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்; நாரியை எங்கணும் நாடினன்; நாடி, பேர் உலகு எங்கும் உழன்று, இருள் பின்னா, மேருவின் - வெங் கதிர் - மீள மறைந்தான். | வெங்கதிர் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்; ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் - வீரர்களாகிய (அந்த) இராமலக்குவரது மனத் துன்பத்தை அறிந்து; நாரியை எங்கணும் நாடினன் நாடி - பெண்ணாகிய சீதையை எங்கும் (துருவித்) தேடிப் பார்த்து; பேர்உலகு எங்கும் உழன்று - (இந்தப்) பெரிய நிலவுலகு முழுவதும் அலைந்து திரிந்து; மேருவின் மீள இருள் பின்னா மறைந்தான் - மேரு மலையில் மறுபடியும் தனக்குப் பின் இருள் தொடரும் படி சென்று மறைந்தான். உலகம் முழுதும் சீதையை தேடி அலுத்த கதிரவன் உலகுக்கு அப்புறம் போயும் தேடுவான் போலத் தனக்குப் பின் இருள் தொடருமாறு மேரு மலையில் மறைந்தான். ஆரியர் - வீரர், அறிவுடையவர், பெரியோர் எனினுமாம். அலக்கண் - துன்பம், நாரி - பெண்; ஈண்டுச் சீதை. அறிந்தான் - முற்றெச்சம். வெங்கதிர் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 35 |