3576. அரண்டு, அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டனபோல், இருள் எங்கணும் முந்த,
தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி,
இருண்டன, மாதிரம் எட்டும் இரண்டும்.

    செறி அஞ்சன புஞ்சம் - அடர்ந்த மையின் திரட்சி; அரண்டு -
அஞ்சி; அருகும் முரண்டன போல் - (இரு) பக்கங்களிலும் வளைத்துக்
கொண்டன போல; எங்கணும் இருள் முந்த - எல்லாப் பக்கங்களிலும்
இருள் சூழ; தெருண்ட அறிவில்லவர் - தெளிவில்லாத
அறிவில்லாதவர்களுடைய; சிந்தையின் - மனத்தினைப் போல; மாதிரம்
எட்டும் இரண்டும் -
திசைகள் பத்தினையும்; முந்தி இருண்டன -
விரைந்து இருளுமாறு செய்தன.

     தெளிவில்லாத மனத்தவர் மனம் போல பத்துத் திசைகளையும் இருள்
வளைத்துக் கொண்டது என்றபடி. அரண்டு + அருகும் = அரண்டருகும்;
அரண் தருகும் எனப் பிரித்து, காவல் தரும் எனவும் பொருள்
கொள்ளலாம். குஞ்சம் - திரட்சி. மாதிரம் - திசை. திசைகள் பத்தாவன -
பெருந்திசை நான்கு, கோண திசை நான்கு. மேல், கீழ்த் திசை இரண்டு
ஆகப்பத்தென்க.                                            36