3577. | இளிக்கு அறை இன் சொல் இயைந்தன, பூவை, கிளிக்கு அறையும் பொழில், கிஞ்சுக வேலி, ஒளிக்கறை மண்டிலம் ஒத்துளது, ஆங்கு ஒர் பளிக்கு அறை; கண்டு; அதில் வைகல் பயின்றார். |
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை - இளி என்னும் இசைக்கு (ஒப்பு என்று) கூறப்பட்ட இனிய சொற்களை உடையனவாகிய நாகண வாய்ப்புட்கள்; கிளிக்கு அறையும் பொழில் - (அந்த இனிமையான சொற்களைக்) கிளிகளுக்குச் சொல்லித் தரும் சோலையில்; கிஞ்சுக வேலி - முள் முருக்க மரங்களை வேலியாக உடைய; ஒளிக் கறை மண்டிலம் ஒத்துளது - ஒளியும் முயற்கறையும் உடைய (சந்திர) மண்டலத்தை ஒத்துள்ளதாகிய; ஒர் பளிக்கு அறை கண்டு - ஒரு பளிங்குப் பாறையைக் கண்டு; ஆங்கு அதில் வைகல் பயின்றார் - அவ்விடத்து அப்பாறையில் தங்கினார்கள். சோலையைச் சேர்ந்த இராமலக்குவர் அங்குள்ள பளிங்குப் பாறையில் தங்கினார்கள். இளி - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசைகளில் ஒன்று. பூவை - நாகண வாய்ப்புள், மைனா. கிஞ்சுகம் - முள் முருங்கை. ஒளிக் கறை - ஒளியும் கறையும் உடன் கூறினமையால் சந்திர மண்டிலம் என்க. பளிக்கறை - பளிங்கினாலாகிய அறை; அறை - பாறை. 37 |