இலக்குவன் நீர் தேடிச் செல்லல்

3578. அவ் இடை எய்திய
     அண்ணல் இராமன்
வெவ் விடைபோல்
     இள வீரனை, 'வீர!
இவ் இடை நாடினை, நீர்
     கொணர்க' என்றான்;
தெவ் இடை வில்லவனும்
     தனி சென்றான்.

    அவ் இடை எய்திய - அந்த இடத்திற்குச் சென்று தங்கிய;
அண்ணல் இராமன் - தலைவனாகிய இராமன்; வெவ் விடைபோல்
இளவீரனை -
வலிமையுள்ள காளை போன்ற இளைய வீரனாகிய
இலக்குவனைப் (பார்த்து); வீர - வீரனே; இவ் இடை நீர் நாடினை
கொணர்க -
இவ்விடத்தில் தண்ணீரைத் தேடிக் கொண்டு வருவாய்;
என்றான் - என்று கூறினான்; தெவ் இடை வில்லவனும் தனி சென்றான்
-
(அது கேட்ட) பகைவர் பின்னிடக் காரணமாகிய வில்லை உடைய
இலக்குவனும் தனியே (இராமனைப் பிரிந்து) போனான்.

     சீதையைப் பிரிந்து இராமன் மாயமானின் பின் சென்றது போல
இராமனுக்கு நீர் கொண்டுவர அவனைப் பிரிந்து இலக்குவன் தனியே
சென்றான் என்க. இடை - இடம். விடை, வலிமை நடை, செருக்கு
ஆகியவற்றால் இலக்குவனுக்கு உவமை. தெவ் - பகை. நாடினை -
முற்றெச்சம், கொணர்க - வியங்கோள் வினைமுற்று. தெவ் - பண்பாகு
பெயர்.                                                    38