இலக்குவனைக் கண்டு அயோமுகி காமுறல்

3579. எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்;
சிங்கம் எனத் தமியன் திரிவானை,
அங்கு, அவ் வனத்துள், அயோமுகி என்னும்
வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள்.

    நீர் எங்கணும் நாடினன் இடை காணான் - தண்ணீரை
எல்லாவிடத்திலும் தேடி அவ்விடத்தில் காணாதவனாகி; சிங்கம் எனத்
தமியன் திரிவானை -
சிங்கம் போலத் தனியாகத் திரிகின்றவனாகிய
இலக்குவனை; அங்கு அவ்வனத்துள் - அப்பொழுது அந்தக் காட்டில்
(உள்ள); அயோமுகி என்னும் - அயோமுகி என்ற பெயர் கொண்ட;
வெங்கண் அரக்கி - கொடிய கண்களை உடைய அரக்கியாகியவள்;
விரும்பினள் கண்டாள் - ஆசை கொண்டு பார்த்தாள்.

     காட்டில் தனியே நீர் தேடிச் சென்ற இலக்குவனை அயோமுகி ஆசை
கொண்டு பார்த்தாள். அயோமுகி - இரும்பு போன்ற முகம் உடையவள்.
காணான், விரும்பினள் - முற்றெச்சங்கள். திரிவானை - வினையாலணையும்
பெயர். வெங்கண் - பண்புத் தொகை.                            39