3580. நல் மதியோர் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்;
'மன்மதன் ஆம் இவன்' என்னும் மனத்தாள்.

    நல் மதியோர் புகல் - நல்ல அறிவுடையவர்கள் சொல்லுகிற; நாம
மந்திரச் சொல் -
அச்சம் தருகிற மந்திரச் சொற்களை; மதியா - மதித்துக்
கட்டுப்படாத; அரவின் - பாம்பினைப் போல; சுடர்கிற்பாள் - சினச் சுடர்
மிக்கவள்; 'இவன் மன்மதன் ஆம்' - 'இவன் (இலக்குவன்) மன்மதனே
ஆனவன்'; என்னும் மனத்தாள் - என்னும் எண்ணத்தால்; தன் மதனோடு
-
தன் மனச் செருக்கோடு; தன் வெம்மை தணிந்தாள் - தன்
கொடுமையும் தணிந்தவளானாள்.

     மந்திரம் கேட்டுக் கட்டுப்படாத பாம்பு போன்றவளாகிய அயோமுகி
இலக்குவனிடம் கொண்ட காதலால் தன் மனச் செருக்கும் வலிமையும்
தணியப் பெற்றாள் என்க. நாமம் - அச்சம். மதன் - வலி, செருக்கு,
வெம்மை - சினம். மதியா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.      40